லங்கா ஈ நியூஸ் இணையத்தள செய்தியாசிரியர் சந்தருவன் சேனாதீரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை திருத்தத்திற்குட்படுத்துமாறு மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சந்தருவன் சேனாதீரவின் முகவரி தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதியின் முகவரியென மாலபே பகுதியிலுள்ள முகவரியொன்று அறிக்கையிடப்பட்டுள்ள போதிலும், கம்பஹா நீதிமன்றத்தில் கடந்த தவணை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதி சரியான முகவரியை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கையளித்ததாக முறைப்பாட்டாளர் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த முகவரி வெளிநாட்டு முகவரி எனவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, அவருக்கு எதிரான மனுவில் காணப்படும் முகவரியைத் திருத்தி, அதனை மீண்டும் சமர்ப்பிக்குமாறு மனுதாரர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
இதனை அடுத்து, பிரதிவாதிக்கு மீண்டும் அறிவித்தல் பிறப்பிக்க முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளான புவனேக அலுவிஹாரே, சிசிர டி அபா மற்றும் அணில் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணயை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தருவன் சேனாதீரவிற்கு எதிராக சட்டத்தரணி மதுர விதானகேவால் கடந்த மாதம் 14 ஆம் திகதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.