சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் அனைத்தும் பொதுவான இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் இன்று உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் நிலையான மற்றும் சமச்சீரான அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு நடத்தப்படுகின்ற இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாடு இந்தோனேசியாவில் முற்பகல் ஆரம்பமானது.
21 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
ஜகார்த்தாவிலுள்ள மாநாட்டு மண்டபத்திற்கு சென்ற ஜனாதிபதியை அந்நாட்டு ஜனாதிபதி ஜோக்கோ விடடோ வரவேற்றார்.
இந்து சமுத்திரத்தை அமைதியான, ஸ்திரமான, சுபீட்சமான பிராந்தியமாக மாற்றுவதற்காக சமுத்திர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பிரகடனத்திலும் இதன்போது அரச தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த பிரகடனத்திற்கு இலங்கையின் அதிகபட்ச அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதில் கைச்சாத்திட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச தலைவர்கள் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமோ, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹஸீனா, இந்திய உப ஜனாதிபதி மொஹமட் அன்ஸார் அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கம் டர்ன்புல் ஆகியோருடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்