சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இலங்கை




குசல் மென்டிஸின் அபார சதத்தின் மூலம் பங்களாதேஷிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கை அணியின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 60 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
உபுல் தரங்க 04 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார்.
இலங்கை அணி மேலதிகமாக 30 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மூன்றாவது விக்கெட்டினை இழந்தது.
தினேஸ் சந்திமால் 05 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எனினும், நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் மென்டிஸ் மற்றும் அசேல குணரத்தின ஆகியோர் 196 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுவான இலக்கிற்கு இட்டுச் சென்றனர்.
அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குசல் மென்டிஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய சத எண்ணிக்கையை 02 ஆக அதிகரித்துக் கொண்ட நிலையில் 166 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அசேல குணரத்தின 85 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சில் முஸ்டபிசூர் ரஹ்மான், சுபாசிஸ் ரோய், தஸ்கின் அஹமட் மற்றும் மெஹெடி ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.