மாவட்ட நீதிபதி மருதமுனை அப்துல் மனாப் மேல் நீதிமன்ற நீதிபதியானார்





PMMA CADER


மருதமுனையைச் சேர்ந்த தாவூத் லெப்வை அப்துல் மனாப் மேல் நீதிமன்ற நீதிபதியாக (09-03-2017)வியாழக்கிழமை மீயுயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்கின்றார்.இவர் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய நிலையிலேயே பதவி உயர்வுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டள்ளது.

இவர் 1963ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி மருதமுனையைச்சேர்ந்த தாவூத் லெவ்வை கதீஜா உம்மா தம்பதிக்கு மகனாக மருதமுனையில் பிறந்தார்.ஆரம்பக்கல்வியை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கற்றார்.உயர்கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியிலும் கற்றார்.

1983ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு சட்ட பீட மாணவனாகத் தெரிவாகி 1991ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.மீண்டும் கொழும்பு பல்கலைக்கழத்தில் கற்று சட்ட முதுமானியைப் பூர்த்தி செய்தார்.அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் நீதவானாக நியமனம் பெற்று மருதமுனையின் முதல் நீதவான் என்ற பெருமையையும் பெற்றார்.

அந்த நீதவான் நியமனத்துடன் கொழும்பு,திருகோணமலை,மூதூர்,அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றி மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று அக்கரைப்பற்று,திருகோணமலை,மட்டக்களப்பு ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றி இறுதியாக வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய நிலையிலேயே இந்த மேல் நீதிமன்ற நீதிபதிக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நியமனத்தைப் பெற்ற மருதமுனையின் முதல் மகன் இவராவார்.

இவர் நீதித்துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள இவர் பல அமைப்புக்கள் மூலம் வறிய மாணவர்களுக்கும்.வறிய குடும்பங்களுக்கும் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்துவருகின்றார்.எல்லோருடனும் மிகவும் அன்பாகப்பழகும் இயல்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.