அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தகுதிக்கு பொருத்தமில்லாத செயல்பாடுகள்




அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நடவடிக்கைகள் உயர்தர தொழில்நுட்ப அமைப்பொன்றின் தகுதிக்கு அமைவாக இல்லையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற தேசிய சட்டவாரம் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது:-
மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை சில மருத்துவர்கள் பணயமாக வைத்திருக்கும் இந்த வேளையில் இலங்கை சட்டத் தரணிகள் சங்கம் நல்லதோர் உதாரணமாக விளங்குகின்றது. அது மக்களுக்கு கல்வியறிவூட்டவும் முழுமையான ஆதரவளிக்கின்றது என்றார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசாங்கம் பதவியேற்றபோது நீதித்துறையில் சுதந்திரம் இருக்கவில்லை. தாமதமாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டன. நீதித்துறையை சரியான வழியில் திருப்பி அதன் கௌரவத்தை நாம் இப்போது நிலை நாட்டியிருக்கிறோம்.
எமது நீதித்துறை பாரபட்சமாக செயல்படுகின்றது என எவரும் கூற முடியாது. ஆனால், தாமதமாக தீர்ப்பு வழங்கப்படுவது இன்னும் ஒரு பிரச்சினையாகத்தான் இருக்கிறது. இதை முடிவுக்கு கொண்டுவர சட்டத்தில் சில மாற்றங்களை செய்து வருகிறோம். முக்கியமாக சட்டங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணி இப்போது நடைபெறுகின்றது.

குற்றவியல் நடைமுறை கோவை, பிரஜைகள் நடைமுறை கோவை, தண்டனைக் கோவை உட்பட இதுவரைப் ஐந்து சட்டங்கள் மொழிபெயர்க்கப்பட்டு விட்டன என்றும் நீதி அமைச்சர் சொன்னார். இந்த நிகழ்வில் புதிய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பும் உரையாற்றினார். அவர் பேசுகையில், சட்டத்தின் உதவியைப்பெற நீங்கள் சட்டத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
சட்ட உதவி பெறுவதற்கு மக்களின் வருமானம் ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்றார், இதன்போது ‘சட்ட கைநூல்’ என்ற அடிப்படை சட்டங்கள் கொண்ட புத்தகமும் வெளியிடப்பட்டது.