படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு பட்டமளிக்க அழைப்பு




கடந்த செப்டெம்பர் மாதம், ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவத்தின் போது உயிரிழந்த ஜெனீராபானு மாஹிர் (வயது 32) என்பவரை, பட்டமளிப்பு விழாவுக்குச் சமுகமளிக்குமாறு கூறி, கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

  இக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட தான், கதறி அழுததாகக் கூறிய, படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர், தனது மனைவி கலைப் பட்டதாரியாகப் பட்டம் பெறவிருந்த நிலையிலேயே, படுகொலை செய்யப்பட்டார் என்றும் குறிப்பிட்டார்.  முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த நூர்முஹம்மது உஸைரா (வயது 56) மற்றும் அவரது மகள் ஜெனீராபானு மாஹிர் ஆகியோர், படுகொலை செய்யப்பட்ட நிலையில், கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதியன்று சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.   

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்டவரான ஜெனீராபானுவின் பட்டமளிப்பு விழா, அடுத்த மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. ‘மனைவி படுகொலை செய்யப்பட்டிருக்கும் வேளையில் தனது கைக்குக் கிடைத்த பட்டமளிப்புக் கடிதத்தை, எந்த முகவரிக்கு அனுப்புவேன்’ என்று கணவர் மாஹிர், பேஸ்புக்கில் உருக்கமான கவி​தையொன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார்.