காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி, வீதியில் காயத்துடன் விழுந்து கிடந்த நபரை, அவ்வழியாகச் சென்றவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்துச் சென்ற சம்பவமொன்று, தம்புள்ளை பிரதேசத்தில் இன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலையில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கானவர், மயக்கமடைந்த நிலையில், வீதியோரத்தில் விழுந்து கிடந்துள்ளார்.
அவ்வழியாக சென்ற வாகனங்கள், காயமடைந்த நபருக்கு அருகில் நின்றும், அவரைக் கொண்டுச் செல்ல விருப்பமில்லாமல் சென்றுவிட்டதாக அயல்வாசிகள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை - பக்கமுன பிரதான வீதியில் 13ஆவது மைல்கல் பகுதியில் பயணித்த போதே குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு பின்னர், அவ்வழியாக பயணித்த தம்புள்ளை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர், அவ்வழியாகச் சென்ற சிறிய ரக லொறியை நிறுத்தி, காயமடைந்த நபரை தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.