ஊடகவியலாளர்களுக்கு இடையூறு; யாழ். ஊடக அமையம்




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களது பணிகளுக்குப் பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியமைக்கு யாழ். ஊடக அமையம் கண்டனம் வெளியிட்டுள்ளது. அம் அமையத்தில் தலைவர் மற்றும் செயலாளரினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊடக சுதந்திரம் பற்றியும் தகவலறியும் உரிமைபற்றியும் பேசிக்கொண்டு இந்த அரசாங்கமும், ஊடகவியலாளர்களது குரல்வளைகளை நெருக்கிப்பிடிப்பதை என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது. 

வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டுக் காணாமல் போயுமிருக்கின்ற ஊடகவியலாளர்களுக்கு ஆண்டுகள் பல கடந்தும் நீதி வழங்க இந்த அரசாங்கமும் தயாராவில்லையென்பதை, யாழ்.ஊடக அமையம் பல சந்தர்ப்பங்களினில் சுட்டிக்காட்டியே வந்துள்ளது. ஊடகவியலாளர்கள் வடக்கிலாயினும் சரி தெற்கிலாயினும் சரி தமது உரிமைகளை சமமாகப் பெற்றுக்கொள்ள உரித்துடையவர்கள் என்பது எமது அமைப்பின் நிலைப்பாடாகும். காணாமல் போனோரது உறவினர்கள், நேற்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். 

இது தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரால் விடுக்கப்பட்ட மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களை யாழ்.ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இத்தகைய சூழல் தொடர்பினில் அரசாங்கமும் ஊடக அமைச்சும் கூடிய கவனம் செலுத்தவும் யாழ்.ஊடக அமையம் மீண்டும் கேட்டுக்கொள்கின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது -