நாளொன்றில் 125 முதல் 150 வரையான விபத்துகள்




இலங்கையில் நாளொன்றில் 125 முதல் 150 வரையான விபத்துகள் இடம்பெறுவதுடன், அவற்றில் 45 சதவீதமானவை பாரதூரமானவை என மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரெட்னம் தெரிவித்தார்.

விபத்துகள்; மூலம் நாளொன்றில் 7 தொடக்கம் 8 பேர்; பலியாவதாகவும் அவர் கூறினார். போதைப்பொருள் பாவனை மற்றும் வீதிப் போக்குவரத்து தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் வந்தாறுமூலை நிலையத்தில்  நேற்று  (6) நடைபெற்றது.
 அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,


 'நாட்டில் இடம்பெறும் பெரும்பாலான குற்றச்செயல்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. போதைக்கு அடிமையானவர்கள் குற்றச்செயல்களை பயமின்றிச் செய்கின்றார்கள்.

 பெண் பிள்ளைகள் மீதான பெரும்பாலான துஷ்பிரயோகங்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, சமூகத்தின் பிரதிநிதிகள் பொலிஸாருடன் இணைந்து செயற்படுவதன் மூலமே குற்றச்செயல்களை ஒழிக்க முடியும்.

 மேலும், வீதி ஒழுங்குகளை சரியாகக் கடைப்பிடிப்பதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்க முடியும். வீதியைக் கடந்து செல்வதற்கு பாதசாரிக் கடவையைப் பயன்படுத்த வேண்டும். மோட்டார் சைக்கிள்களில்; செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்' என்றார்