இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் 12 வயது சிறுவனின் சேதமடைந்த மூக்கை, அவனது நெற்றியில் வளர்க்கப்பட்ட மற்றொரு மூக்கை பொருத்தி சரிசெய்துள்ளனர்.
அருண் பட்டேல் என்ற அந்தச் சிறுவன் குழந்தையாக இருந்தபோது நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டான்.அப்போது அவனது மூக்கு பலமாக சேதமடைந்து பின்னர் அது விகாரமாக மாறியது.
நோய் தொற்று அவனது மூக்கின் எலும்பை பாதித்தது. அதை சரிசெய்ய மருத்துவர்கள் சிரமப்பட்டனர்.
இது போன்ற ஒரு அறுவை சிகிச்சை சீனாவில் 2013 மேற்கொள்ளப்பட்டது. சாலை விபத்தில் ஒருவரின் மூக்கு சேதமடைந்தது. அவருக்கு புது மூக்கு பொருத்தப்பட்டது.
அருண் பட்டேலுக்கு அவன் பிறந்தவுடன் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்ட போது, அவனது பெற்றோர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மருத்துவரிடம் கூட்டிச்சென்றனர்.
ஆனால் அந்த சிகிச்சை அவனது உடல் நிலையை மோசமாக்கியது. அதன் பின் அவனது மூக்கின் திசு பெரிய அளவில் சேதமாகி அவன் மூக்கையே இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது .
ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, இந்தூரில் உள்ள மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று, நான்கு கட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் அருணுக்கு புதிய மூக்கை கொடுக்க முடிவு செய்தது.
அறுவை சிகிச்சைக் குழுவை வழி நடத்திய மருத்துவர் அஷ்வின் தாஸ் பி பி சியிடம் பேசுகையில், ''மற்ற உறுப்புகளைப் போன்று புதிதாகப் பொருத்தப்படும் மூக்கும் வேலை செய்யும் என்று தன்னம்பிக்கையோடு'' தான் இருந்ததாக கூறினார்.
அவர் மேலும் இந்த சிகிச்சை முழுமையாக நிறைவு பெற ஒரு ஆண்டு காலம் ஆனது என்றார்.
முதல் கட்டத்தில், ஒரு சிலிகான் ''திசு பெருக்கி''யை சிறுவனது நெற்றியில் செலுத்தி அங்கு ஒரு புதிய மூக்கு வளர இடம் ஏற்படுத்தப்பட்டது. பிறகு ஒரு சிறப்பு ரசாயனத்தை செலுத்தி திசுக்கள் வளரவைக்கப்பட்டது.
இரண்டாம் கட்டத்தில் மார்பு பகுதியில் இருந்து குருத்தெலும்பை எடுக்கப்பட்டு, புதிய மூக்கு நெற்றிப் பகுதியில் மூன்று மாத காலத்தில் வளர்ந்தது..
மூன்றாம் கட்டத்தில் மருத்துவர்கள் செயற்கை மூக்கை நெற்றியில் இருந்து நீக்கி முகத்தில் பொருத்தினர். இறுதி கட்டத்தில் நெற்றி சரிசெய்யப்பட்டது.