தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்த வேண்டும்




இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் வட பகுதியில் மீட்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் பழையவையாக இருக்க வாய்ப்பு இல்லை எனவும் மஹிந்த கண்டியில் கூறியுள்ளார்.

போர் முடிவடைந்துவிட்டாலும் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் எனக் கூறிய அவர், தற்போது புலனாய்வு பிரிவு முறையாக செயல்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
வடக்கில் வெடிபொருட்கள் மீட்கப்படும் சம்பவங்களை சிறு விடமாக எடுத்துக்கொள்ளாமல், அது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய கடமை அரசுக்கு இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ 
தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவுகளிலிருந்த மூத்த அதிகாரிகள் தற்போது அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார்.
இதன் காரணமாக தேச பாதுகாப்பு குறித்த முக்கிய புலனாய்வுத் தகவல்கள் சரிவர கிடைக்கப்பெறாத சூழலும் நாட்டில் நிலவுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் முழுமையான விசாரணை முறையான வகையில் முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே, மக்களிடம் தேசியப் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியுமெனவும் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்,முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பொலிஸாரிடம் வாக்குமூலம் ஒன்றையும் அளித்துள்ளார்.
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் கொழும்பு வெள்ளவத்தைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டடிருந்ததாக அவை மீட்கப்பட்ட நாளன்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தன் பின்னணியிலேயே இன்றைய தினம் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.