நாங்கள் தீவிரவாதத்தை விடுத்து நிதான அரசியலை விரும்புகின்றோம். எம்.பி. துரைராஜசிங்கம்.




வடக்கு கிழக்கினை பிரித்து இந்தியாவின் தமிழகத்துடன் இணைக்கப் போகின்றார்கள் என்று சிங்கள மக்களில் சிலர் அஞ்சுகின்றார்கள். நாங்கள் சுயமாகவே வாழ


விரும்புகின்றோம். தமிழகத்தின் அரசியல் எங்களுக்கு தேவையில்லை. பிரிந்து சென்று வேறு எங்கோ சேர்வது தொடர்பான அரசியலை நாங்கள் கனவில் கூட நினைத்தது கிடையாது என மாகாண விவசாய,நீர்பாசன, கூட்டுறவு மீன்பிடித்துறை அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.


மட்டக்களப்பு குருமண்வெளியில் நீண்டகாலம் சமூகப் பணியாற்றிவரும் வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் 29வது ஆண்டு நிறைவும் கூட்டுறவு சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் க. நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
தொடர்ந்து உரையாற்றிய துரைராஜசிங்கம்,

கிழக்கு மாகாண சபையில் நாங்கள் கால் உடைக்கப்பட்டவர்களாகவும் கூண்டில் அடைக்கப்பட்டவர்களாகவும் உள்ளோம். அரச நிர்வாகம் போன்றே மாகாண சபையும் இயங்குகின்றது. மாகாண சபை தீர்மானம் எடுக்க வேண்டும். நாங்களே தீர்மானிக்கின்ற அதிகாரம் வழங்கப்பட வேண்டும். எங்கள் பிரதேசம் தொடர்பான தீர்மானத்தினை நாங்களே எடுத்து அதனை நடைமுறைப்படுத்துவோம்.

இந்த நாடு பன்மைத்துவமிக்க நாடு என்ற அடிப்படையில் அதன் பன்மைத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அதற்கேற்றவாறு அரசியல் வழிமுறைகள் கையாளப்பட வேண்டும்.

இந்த நாட்டினை ஒரே நாடாக ஒற்றையாட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் இருந்தவர்கள் எமது தலைவர்கள்தான்.

தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கு இனரீதியான பிரதிநிதித்துவம்தான் சிறந்தது என்ற முன்மொழிவினை புறந்தள்ளி பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம்தான் வேண்டும் என்கிற நிலைமைக்கு சிங்கள தலைவர்கள் வந்தபோது தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அந்த பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம் கையாளப்படவேண்டும் என சேர் பொன். இராமநாதனுக்கு பின்னர் கடமையேற்ற சேர்.பொன். அருணாசலம் அவர்கள் கருத்தினை முன்வைத்தபோது அதனை புறந்தள்ளினார்கள்.

சேர். பொன். அருணாசலம் அவர்களை இலங்கை தேசிய காங்கிரஸில் உறுப்பினராக்கி கொழும்பு நகரப்பகுதியை அவருக்கு வழங்குவதாக கூறிவிட்டு இரகசியமான முறையில் தேர்தல் நியமனப்பத்திரத்தினை இலங்கை தேசிய காங்கிரஸில் வேறு ஒருவரின் பெயரில் தாக்கல் செய்துவிட்டு சேர். பொன். அருணாசலம் அவர்களை வெளியேற்றினர். அப்போதுதான் இலங்கையில் முதன்முறையாக பெரும்பான்மை என்ற சொல் பாவிக்கப்பட்டது.

அதன் பின்னரே முதன்முதலாக அருணாசலம் அவர்களினால் தமிழர்கள் இந்த நாட்டில் சுயமரியாதையுடன் வாழவேண்டுமானால் தமிழீழம் அமைக்கப்படவேண்டும் என்று கூறினார். தந்தை செல்வாவோ, பிரபாகரனோ எங்களின் அரசியலில் தமிழீழம் என்ற சொல்லை முதன்முறையாக உச்சரித்தது கிடையாது. மிகவும் அறிவுபூர்வமாக சிந்தித்த சேர்.பொன். அருணாசலம் அவர்கள்தான் அந்த வார்த்தையினை முன்வைத்தார்.

இந்த நாட்டினை ஒரு நாடாக வைத்துக் கொண்டு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு தோழமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழக்கூடிய ஒரு அரசியல் முன்மொழிவினை 1949 டிசம்பர் 18ஆம் திகதி மருதானை எழுதுவினைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண கூட்டத்தில் தந்தை செல்வா முன்வைத்தார். அதுதான் கூட்டாட்சியென்றும் சமஸ்டி என்றும் சொல்லப்பட்டது.

அதிகாரம் தேவையான இடங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒரு இடத்தில் இருந்து அரசியலை நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் கொண்டு செல்லமுடியாது.
இந்த விடயங்களையெல்லாம் கவனத்தில் கொண்டே ஜனாதிபதி அவர்கள் ஏறாவூரில் உரையாற்றியுள்ளார்.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் விமோசனம்பெற்று வாழவேண்டுமானால் எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும், தென்னிலங்கையில் உள்ள இரண்டு பெரும் அரசியல்கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்,

இந்த விடயங்களை வைத்துக்கொண்டு மிகமிக கவனமாக அரசியலை வழிநடத்திச் செல்லவேண்டிய மிகப்பாரிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

மிகவும் கவனமாக மிகவும் நிதானமாக இந்த விடயத்தினை நகர்த்திச்சென்று 2016ஆம் ஆண்டு நாங்கள் சிறந்த அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும். எமது அடுத்த சந்ததி மீண்டுமொரு துன்பத்திற்குள் விளாத வகையில் அரசியல்சாசனம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைத்துவிட்டால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நினைத்துவிட்டால் இங்கு சிறந்த அரசியலமைப்பினை கொண்டுவந்துவிடமுடியும் என சிலர் நினைக்கின்றனர்.

தென்னிலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் சமாதானப்படுத்த வேண்டும். மக்களின் வாக்குகளைப் பெறவேண்டுமானால் அவர்களை சிறந்த நிலைப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக நாங்கள் எமது பகுதிகளில் இருந்து சாதகமான விடயங்களை தெரிவிக்க வேண்டும்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்