கிழக்கின் முதலாவது ஆயத்த ஆடைத் தொழிற்சாலையை ஜனாதிபதி திறந்து வைத்தார்.




ஏ.எச்.ஏ. ஹுஸைன் 







கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் 5000 குடும்பங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் ஏறாவூரில் நிருமாணிக்கப்பட்ட ஆயத்த ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறித் தொழிற்சாலை என்பனவற்றை வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் மாகாண சபையும் தனியார் துறையும் இணைந்த வகையில் பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது இதுவே தடவையாகும்.
முதலமைச்சரின் முயற்சியினால் கிழக்கு மாகாண சபை கிராமப்புற இளைஞர் - யுவதிகளுக்கு உள்ளுரிலேயே தொழில் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் தைக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளை அமைக்கும் வேலைத் திட்டம் துவங்கியுள்ளது.
தமது பிரதேசத்திலிருந்தும் கிராமங்களிலிருந்தும்  மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக  செல்வதை  கட்டுப்படுத்துவதாக இந்த தொழிற்சாலை அமையும் என  அங்கு பணியாற்றும் தமிழ் - முஸ்லிம்  பெண் பணியாளர்கள்  எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர்.

தாங்கள் வாழும் பிரதேசத்தில் தொழில் வாய்ப்புகளை  பெறும் போது அது தங்களுக்கும் தங்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பாக அமையும் என்றும் குறிப்பாக விதவைப் பெண்களின் வாழ்வாதரத்திற்கு இது  பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், நகர அபிவிருத்தி திட்டமிடல் நீர்விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட வெளிநாட்டுத் தூதுவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.