கண்டம் தாண்டும் ஏவுகணையை செலுத்தும் ராக்கெட்டை சோதித்துள்ளது வடகொரியா
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உந்தும் ராக்கட் ஒன்றை தாம் வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.அமெரிக்கா மீது அணுகுண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தும் வல்லமை தமக்கு உள்ளதை இச்சோதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது என வடகொரியா மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைவர் கிம் ஜாங் உண்ணின் நேரடிக் கண்காணிப்பில் இந்த ராக்கெட் சோதிக்கப்பட்டதாக வடகொரிய ஊடகம் அறிவித்துள்ளது.
அணுகுண்டு சோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வடகொரியா இப்போது இந்தப் புதிய ராக்கெட்டை சோதனை செய்துளது.
வடகொரியாவின் இந்தச் செயல் ஐக்கிய நாடுகள் சபை அதன் மீது இன்னொரு சுற்று பொருளாதார தடைகள் விதிக்கத் தூண்டக் கூடும் என பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
வடகொரியா சவடால் பேச்சுக்களையும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கோரியுள்ளது.