இலங்கையில் சமஷ்டி வழியிலான தீர்வினை தென்னிலங்கை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
பலதரப்பட்டவர்களுடன் விவாதித்து, மக்கள் கருத்தையும் பெற்ற பின்னரே சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வடமாகாண சபை முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், சமஷ்டி ஆட்சி நாட்டை பிரிக்கும் என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் பிரசாரம் செய்துவருவது வருந்தத்தக்கது எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கு சென்றிருந்த சுவீடனின் வெளியுறவு அமைச்சரை சந்திருந்த போதே முதலமைச்சர் இந்தக் கருத்துக்களை கூறியுள்ளார்.
உள்நாட்டு யுத்தம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகும் சூழலிலும் வடமாகாண மக்கள் தமது இயல்பு வாழ்கையை முன்னெடுப்பதிலும் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதிலும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.
இலங்கை நடுத்தர வருவாயை கொண்ட நாடாக பட்டியல் படுத்தப்பட்டிருந்தாலும், வடக்கு மாகாண மக்கள் குறைந்த வருவாயுள்ளவர்களாகவே இருப்பதாகவும் சுவீடன் வெளியுறவு அமைச்சரிடம் அவர் தெரிவித்துள்ளனர்.
தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் சமஸ்டி என்றால் நாட்டைப் பிரிப்பதாகும் என்று நீண்ட காலமாகப் பிரசாரம் செய்து வந்துள்ளதனால் நிலைமை மோசமாகியுள்ளதாகவும், அதனைப் போக்குவதற்கு வெளிநாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் கோரியிருப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு மூலம் சமஷ்டி வழித் தீர்வினை கொண்டுவருமாறு வடக்கு மாகாணசபை அண்மையில் தீர்வு முன்வைத்திருந்தது.
ஆனால், சமஷ்டி என்ற பேச்சுக்கே தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.