ரணில் - மஹிந்த இணக்கப்பாட்டில்....! பின்னணி என்ன?




நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நடவடிக்கைக்கு கூட்டு எதிர்க்கட்சியினரின் ஆதரவை பெற்றுத் தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமருடன் இடம்பெற்ற பிரத்தியேக சந்திப்பின் போது, மஹிந்த இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார்.
ரணில் - மஹிந்த ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவும் அங்கு பிரசன்னமாகியிருந்தது.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய நிலை குறித்து தினேஷ் குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த பிரதமர், இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி திருத்தம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஐக்கிய தேசிய கட்சி, மாதுளுவாவே சோபித்த தேரரின் அமைப்பு, அத்துரலிய ரத்ன தேரரின் பிவிதுரு ஹெடக் அமைப்பு என்பன இணைந்து நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக மக்களிடம் உறுதியளித்திருந்தனர்.
ரணிலுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, இதனை நினைவுபடுத்திய மஹிந்த, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழுமையான ஆதரவினை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ரணில் - மஹிந்தவின் சந்திப்பு தீர்மானமிக்கதாக கருதப்படுகிறது.