யாழ்.மாவட்டத்தில் படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் சுவீகரிப்பிற்காக நாளை அளவீடு செய்யப்படவுள்ள நிலையில் குறித்த நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் நாளை காலை 8 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக நடைபெறும் என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
யாழ்.தீவம் மண்கும்பான் பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் சுமார் 60 ஏக்கர் வரையிலான நிலம் மற்றும் ஆனைக்கோட்டை பகுதியில் 16 பரப்பு நிலம் ஆகியன படையினரின் தேவைகளுக்காக சுவீகரப்பதற்காக நாளை காலை நிலங்கள் அளவீடு செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த நில அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசியல்வாதிகள், மற்றும் பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் மற்றும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை குறித்த நில அளவீடு தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் இலங்கையில் நல்லாட்சி நடப்பதாக மக்களை பிரமைக்குள் ஆழ்த்தி விட்டு மறுபக்கம் மக்களுடைய நிலங்களை படையினருக்காக கபடத்தனமாக சுவீகரிப்பதற்கு நினைக்கின்றது.
எனவே எமது எதிர்ப்பை வலுவாக தெரிவிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.