குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: பலர் காயம்





இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள சோசலிஷ கட்சியின் முன்னணி தலைவர் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பாதுகாக்கக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை தடியடியில் அவரது ஆதரவாளர்கள் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

குமார் குணரட்னம் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர்.

குமார் குணரட்னத்தின் ஆதரவாளர்கள், தலைநகர் கொழும்பு பொரளையில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்கள கட்டடத்தின் கண்ணாடிகளை உடைத்து, அதனுள் நுழைய முற்பட்டபோது அங்கு பெரும் பதற்றமான சூழல் காணப்பட்டது.

குடிவரவு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில், குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கி கொழும்பு நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் தீர்ப்பளித்திருந்தது.
இதன் பின்னணியில், அவரது அரசியல் உரிமையை பாதுகாக்கும்படி கோரியும், அவரை விடுதலை செய்யக்கோரியும் அவரது ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.
கோஷமெழுப்பியப்படி ஊர்வலமாக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தை நோக்கி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கட்டடத்தை உடைத்து உள்நுழைய முற்பட்டபோது அதனை தடுப்பதற்காக காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது காயமடைந்த ஆதரவாளர்கள் மருத்துமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
குமார் குணரட்னம் விடுதலை செய்யப்படும்வரை தமது போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற குமார் குணரட்னம், இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.