திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயங்களுக்குள்ளான 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
01.04.2016 அன்று காலை 7.30 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் மேபீல்ட் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற கார் ஒன்றுடன் கொட்டகலையிலிருந்து அட்டன் குடாஓயா பகுதிக்கு சென்ற லொறி ஒன்று நேர்க்கு நேர் மோதியுள்ளது.
கொட்டகலை பகுதியிலிருந்து அட்டன் பகுதிக்கு ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற குறித்த பஸ் ஒன்றை மேற்படி லொறி முந்திச்செல்ல முற்பட்ட போதே காருடன் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்தோடு எனினும் குறித்த லொறியுடன் பஸ் மோதுண்டதால் பஸ்ஸில் பயணித்த 13 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லொறியின் சாரதியை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.