யாழ்.குடாவில் கஞ்சாவின் ஊடுருவல்! காரணம் என்ன? பின்னணி யாது?




யாழ். குடாநாட்டில் தினமும் கஞ்சா கைப்பற்றப்படுவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கஞ்சாக்களை கைப்பற்றுவது என்பதற்கப்பால், கைப்பற்றப்படாத கஞ்சாக்கள் எவ்வளவு என்ற கேள்வி எழுவது நியாயமே.
என்றும் இல்லாதவாறு கஞ்சா யாழ். குடா நாட்டிற்குள் ஊடுவருவதற்கான காரணம் என்ன? இதன் பின்னணி யாது? என்ற கேள்விக்கான விடை கண்டறியப்பட வேண்டும். இல்லையேல் கஞ்சாவால் எங்கள் தமிழ் இனத்தின் எதிர்காலம் பாழாகும் என்பது நிறுத்திட்டமான உண்மை.
பொதுவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கக் கூடிய மக்கள் ஒருவரை ஒருவர் இனங்காணக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். எனினும் சமகால சூழ்நிலையில் குடாநாட்டிற்கு வெளியில் இருக்கக் கூடியவர்கள் வந்து போகக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.
இருந்தும் வெளியிடத்தைச் சேர்ந்த ஓரிருவர் வித்தியாசமான முறையில் நடமாடுவாராக இருந்தால் அவர்கள் தொடர்பில் சந்தேகம் கொள்ளக்கூடிய சூழ்நிலை இன்னமும் இருக்கவே செய்கிறது.
அந்தளவுக்கு யாழ்.குடாநாட்டில் நடமாடுகின்றவர்கள் எந்த இனத்தவர், எந்த சமயத்தவர், அவர் யாழ் குடாநாட்டைச் சேர்ந்தவரா அல்லது வெளியிடத்தைச் சேர்ந்தவரா என்பதை அடையாளப்படுத்துவதில் அதிக சிரமம் இல்லை என்றே கூறவேண்டும்.
நிலைமை இவ்வாறாக இருந்த போதிலும் போதைப் பொருள் கடத்தல்கள் மிக தாராளமாக நடக்கின்றன என்றால் இதற்கான மூல காரணம் யார்? என்றே கேள்வி எழுவது அவசியமானதே.
போருக்குப் பின்பான தமிழர் தாயகம் எந்த வகையிலும் மீண்டெழக் கூடாது என்றவாறு சில தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டால் அன்றி இது போன்ற போதைப்பொருள் பயன்பாடு இந்தளவு வேகமாக நடப்பது சாத்தியம் இல்லை என்றே கூறவேண்டும்.
எது எவ்வாறாயினும் ஆரம்பக் கட்டங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தவறினால், இதன் எதிர்காலம் தென்பகுதியில் இருந்த பாதாள உலக கோஷ்டிக்கு ஒத்ததான சம்பவங்களே நடக்கும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும்.
ஆகையால் யாழ் குடாநாடு உள்ளிட்ட வடபுலம் தனது இழப்புகளைக் கடந்து ஓர் உயர்நிலைக்கு தன்னை உட்படுத்த வேண்டுமாயின் போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்கள் அடியோடு வேரறுக்கப்பட வேண்டும். இல்லையில் எங்கள் இளம் சந்ததியை காப்பாற்றுவது எங்ஙனம் என்ற ஏக்கத்தோடு வாழ்கின்ற சூழ்நிலையே உருவாகும்.
ஆகையால் நாம் அனைவரும் விழிப்பாக இருப்போமாக இருந்தால், எங்கள் மண் மீது, மக்கள் மீது எங்களுக்கு பாசம் இருந்தால் நிச்சயமாக போதைப்பொருள் பாவனையை அடியோடு வேரறுப்பதுடன் அதில் சம்பந்தப்பட்டவர்களையும் மனம் திருந்த வைக்க முடியும்.