இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் வருகின்றனர்.
அண்மைக் காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை மதிப்பீடு செய்யவும் அங்கு துன்புறுத்தல்கள், சித்திரவதை மற்றும் வேறு வகையான கொடூரமான மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தக்கூடிய நடத்தை அல்லது தண்டனைகளை அடையாளம் காண்பதில் இருக்கும் சவால்கள் குறித்து இந்த வல்லுநர்கள் விவாதிக்கவுள்ளனர்.
ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் அந்த சிறப்பு வல்லுநர்கள் தமது பயணத்தின்போது அரசு அதிகாரிகள், சட்டத்துறை வல்லுநர்கள் உட்பட பலருடன் ஆலோசிக்கவுள்ளதாக ஐ நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
அரசின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் இந்த வல்லுநர் குழு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காண உரிய வழிமுறைகள் உள்ளதா, அனைவரும் நீதிபரிபாலன முறையை பெற்றுக்கொள்ள முடிகிறதா என ஆராயவுள்ளனர்.
இலங்கையில் போருக்கு பின்னரான காலத்திலும் சித்திரவதை மற்றும் இதர துஷ்பிரயோகங்கள் தடுக்கப்படுகிறதா எனவும், அது தொடர்பில் என்னென்ன நெருக்கடிகள் உள்ளன எனவும் அந்த இரு வல்லுநர்களும் விவாதிக்கவுள்ளனர்.
இலங்கை தற்போது சரித்திரத்தின் முக்கியமான திருப்புமுனையில் உள்ளது எனக் கூறும் ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் செய்திக் குறிப்பு, தமது வல்லுநர்களின் பயணம் மற்றும் பரிந்துரைகள் மூலம் எதிர்காலத்துக்கு தேவையான சரியான பாதையை இலங்கை வகுத்துக் கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தமது ஒருவார காலப் பயணத்தின்போது இந்த இரு வல்லுநர்களும், தேசிய மனித உரிமைகள் ஆணையம், சட்டமா அதிபர் அலுவலகம், வழக்கறிஞர்கள், சிவில் சமூகத்தினர், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளனர்.
நாட்டின் வடக்கு-கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கு அவர்கள் பயணிக்கவுள்ளனர்.
இலங்கை தொடர்பான விவாதம் ஐ நாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த பயணம் அமைகிறது.