பண்டாரநாயக்க குடும்பத்தினரின் பங்களிப்பை என்றும் மறக்க முடியாது




தனது திறமையால் பெண்களும் சாதிக்கலாம் என்ற நிலைப்பாட்டை உருவாக்கிய ஒருவர் தான் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, அவரது சேவை எவராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் 100ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி;
முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மறைந்தப் பின்னரும் அவரது பெயர் சர்வதேச ரீதியிலும் மக்கள் மத்தியிலும் நிலைத்து நிற்கின்றது என்றால், அது அவரது அரசியல் சாணக்கியத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. இன்று இந்நாடு வளம் பெற்று இருக்கின்றது என்றால், அது பண்டாரநாயக்கவின் குடும்பத்தினரின் பங்களிப்பும் உள்ளடங்குகின்றது என மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் “ஸ்ரீமாவோ” என்ற புத்தகத்தின் தமிழ், சிங்கள பிரதிகள் சுனேத்ரா பண்டாரநாயக்கவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்கப்பட்டது.
மேலும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் 100ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரையும் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீமினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.
அதேவேளை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் 100ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கும் ஜனாதிபதியின் கரங்களால் பரிசில்கள் வழங்கப்பட்டன.
சர்வமதத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட அமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக, சுனேத்ரா பண்டாரநாயக்க உட்பட பண்டாரநாயக்க குடும்ப உறுப்பினர்கள், ஸ்ரீ.ல.சு.கட்சி ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்