இலங்கை: ஆறு இந்தியர்களின் சிறுநீரகம் அகற்றம்





இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட எட்டு இந்திய நபர்களில் ஆறு பேரின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தையில் கைதுசெய்யப்பட்ட 8 பேரில் ஆறு பேரின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.
சில வாரங்களுக்கு முன்னதாக, இந்த இந்தியர்கள் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதாக கூறிய காவல்துறையினர், அப்போது இவர்களில் ஆறு பேரின் சிறுநீரகங்கள் நீக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளதாகக் கூறினர்.
காவல்துறையினர் முன்வைத்த கருத்துக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்தேக நபர்களை எதிர்வரும் நான்காம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
மற்றொரு வழக்கில், தற்போதைய அரசாங்கம் ஒரு தேசிய அரசாங்கம் அல்ல என்று தீர்ப்பளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அரசியல் யாப்பின் 19வது திருத்தச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்றுள்ள கட்சியுடன் ஏனைய சகல கட்சிகளும் இணைந்து உருவாக்கும் ஆட்சிக்கே தேசிய அரசாங்கம் என்று அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கியுள்ள அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் என்று கூறுவது அரசியல் யாப்பை மீறும் ஒரு செயலென்று இந்த மனுவின் மூலம் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.