(சுலைமான் றாபி)
வாங்காமம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கிராமம். வசதியற்ற கிராமம்.
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாங்காமத்தில் மிக நீண்ட நாட்களாக பாழடைந்த நிலையிலும், குப்பைகள் தேங்கிக் கிடக்கும் நிலையிலும் "வாங்காமம் அரசினர் வைத்தியசாலை" காட்சி தருகின்றது. வாங்காமம் ஒராபிபாஷா பாடசாலைக்கு அருகாமையில் காணப்படும் குறிப்பிட்ட வைத்தியசாலை சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இயங்காத நிலையில் உள்ளதாக அப்பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாங்காமத்தில் மிக நீண்ட நாட்களாக பாழடைந்த நிலையிலும், குப்பைகள் தேங்கிக் கிடக்கும் நிலையிலும் "வாங்காமம் அரசினர் வைத்தியசாலை" காட்சி தருகின்றது. வாங்காமம் ஒராபிபாஷா பாடசாலைக்கு அருகாமையில் காணப்படும் குறிப்பிட்ட வைத்தியசாலை சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இயங்காத நிலையில் உள்ளதாக அப்பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உண்மையில் வாங்காமம் பிரதேசமானது அடிப்படை வசதிகள் குறைந்த பிரதேசமாகவும், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தங்களது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை வெளி இடங்களுக்குச் சென்றே நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையும் காணப்படுகின்றது. இது இவ்வாறு இருக்க இப்பகுதியில் வசிக்கும் அதிகமான மக்கள் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கும் மிகவும் பங்களிப்பு செய்திருந்தனர்.
இருந்த போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கண்களுக்கு இப்பகுதி மக்களின் வைத்தியசாலைப் பிரச்சினைகள் தென்படாமல் போனது ஆச்சரியமாகும்.
மேலும் வாங்காமம் பிரதேசத்தில் காணப்படும் இவ்வரசினர் வைத்தியசாலை பிரதேசத்தில்; சுமார் 300 ற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருவதோடு இவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ள அண்மையில் உள்ள இறக்காமம், அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய வைத்தியசாலைகளுக்கே சென்று சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையும் இம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க இப்பகுதி மக்களின் வாக்குகளினால் அமைச்சர்களாகியுள்ள சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம், மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் உள்ளிட்டோர்கள் இவ்வைத்தியசாலையின் மீள் புனரமைப்பு விடயத்திலும், இவ்வைத்தியசாலையினை மீள இயங்க வைக்கும் விடயத்திலும் கரிசனையற்றுக் கிடப்பதாகவும் இப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இருந்த போதும் குறிப்பிட இரண்டு சுகாதார அமைச்சர்களும் மிக அண்மையில் தாங்கள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இயங்கும் நிலையில் உள்ள வைத்தியசாலைகளை மாத்திரமே பார்வையிட்டதோடு, அவ்வைத்தியசாலைகளில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ள நிலையில் அவர்களால் இயங்கும் நிலையில் உள்ள வைத்தியசாளைகளுக்கே கூடுதல் முன்னுரிமைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால் இவ்விரு அமைச்சர்களும் குறிப்பிட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி விடயத்திலும், அதனை நேரில் சென்று பார்வையிடும் விடயத்திலும் கரிசனை எடுக்காமல் விட்டது இப்பகுதி மக்களிடத்தில் மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இவ்வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசத்திலேயே ஒரு ஜும்மா பள்ளிவாசல், குர்ஆன் மதரசா மற்றும் பாடசாலை உள்ளிட்ட முக்கிய இடங்கள் காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான நிலைமைகளில் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருத்தருக்குக் கூட திடீர் சுகயீனம் ஏற்பட்டால் அவர்களுக்கு அந்த இடத்தில் சிகிச்சையளிப்பதற்கு கூட ஒரு வைத்தியசாலை இல்லாத நிலையிலேயே இப்பகுதி மாணவர்களின் கல்வியும் சென்று கொண்டிருப்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய முக்கிய விடயமாகும்.
மேலும் சுகாதார அமைச்சர்களின் தொகுதியிலே இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் தேசிய சுகாதாரத் திட்டங்களின் மூலம் இதுபோன்ற பின் தங்கிய பகுதி மக்களின் சுகாதாரத் தேவைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்படப் போகின்றது?
எனவே அமைச்சுப்பதவிகளை வைத்துக் கொண்டு இயங்கும் நிலையில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மட்டும் கரிசனை காட்டாமல், அமைச்சின் அதிகாரங்களைப் பயன்படுத்தி வாங்காமம் போன்ற பிரதேசங்களில் இவ்வாறு காணப்படும் வைத்தியசாலைகளின் ஆளணிப் பற்றாக்குறைகளை நிரப்புவதோடு, இவ்வைத்தியசாலையினை மீள இயங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நோய்களினால் அல்லல்படும் மக்களின் தேக ஆரோக்கியத்திற்காக வழிசமைத்துக் கொடுப்பது அரசியல்வாதிகளினதும், அமைச்சர்களினதும் கடமையாகுமல்லவா?