பயங்கரவாத தடைச் சட்டம், ஏனைய சட்டங்களின் கீழ் 18 படைவீரர்கள் கைது




இவ்வருடம் ஜனவரி 14ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 10 படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை அன்றைய தினம் ஏனைய சட்டங்களின் கீழ் 8 படை வீரர்களும் கைது செய்யப்பட்டதாக சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ.ம.சு.முன்னணி எம்.பி.யான உதய கம்மன்பிலவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கே சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சு இவ்வாறு பதிலளித்துள்ளது.
பிரகித் எக்னெலிகொடை என்பவர் காணாமல் போனமையுடன் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யபட்டுள்ளனர். இராணுவ ஆளணியினருக்கு பொலிஸாரினால் தயாரிக்கப்பட்ட போலியான விடயங்களை உள்ளடக்கிய கூற்றுக்களில் கையொப்பமிடுமாறும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலவந்தப்படுத்துவதை நீதிமன்றத்திற்கும் பொலிஸ்மா அதிபருக்கும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என உதய கம்மன்பிலவினால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சினால் சபா பிடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலால்
2016 ஜனவரி 14ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 7 தரைப்படை வீரர்களும் 3 கடற்படை வீரர்களுமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே திகதியளவில் ஏனைய சட்டங்களின் கீழ் 4 தரைப்படை வீரர்களும் 4 பொலிஸாருமாக மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரகீத் எக்னெலிகொடை என்பவர் காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள படை வீரர்களிடம் பலவந்தமாக பொலிஸார் கையொப்பம் பெற முயற்சிப்பதாக இதுவரை அவ்வாறானதொரு முறைப்பாடு பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைக்கவில்லை.
கைது செய்யப்பட்டுள்ள படைவீரர்கள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியடையாததால் அவர்களின் விபரங்களை வெளியிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.