இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள ECTA ஒப்பந்தம் வேண்டாம், மாலபே தனியார் பல்கலைக்கழகத்தினை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிளையின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதிக்கு அருகில் இருந்து ஆரம்பித்த கண்டன பேரணி காந்தி பூங்காவரை நடைபெற்றது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள ECTA ஒப்பந்தம் வேண்டாம் எனக் கோரியும், மாலபே தனியார் பல்கலைக்கழகத்தினை அரசு பொறுப்பேற்குமாறு வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.
காந்தி பூங்காவினை பேரணி வந்தடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் தலைவர் அழகையா லதாகரன் தலைமையில் குறித்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், பல்வைத்தியர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ECTA உடன்படிக்கையினை நிறுத்துமாறு கோரும் பதாதைகளும் ஏந்தியிருந்தனர்.