தமிழ் மொழி புறக்கணிப்பு




(க.கிஷாந்தன்)

மத்திய மாகாணத் தமிழ் பாடசாலைகளின் ஆசிரியர் , அதிபர்களுக்குக் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற போது தமிழ் மொழிக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் செயற்படுகின்ற சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தினால் நுவரெலியா மாவட்ட அதிபர்களுக்கு 28.03.2016 அன்று நடத்தப்பட்ட கருத்தரங்கில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமையைச் சுட்டிக்காட்டி பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்திலுள்ள திணைக்களங்களால் ஒழுங்கு செய்யப்படுகின்ற கருத்தரங்குகளில் பங்கு பற்றுகின்ற தமிழ் உத்தியோகஸ்தர்களின் நலன் கருதி விரிவுரைகள் தமிழ் மொழியில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் அரசகரும மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றென்பதால் இவ்விடயத்தில் மத்திய மாகாண கல்வியமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.