கைதுக்கு தடை கோரி பெசில் மனு; உச்ச நீதிமன்றம் மறுப்பு





இந்த வேண்டுகோள் முதலில் மாஜிஸ்ட்ரேட் நீதவான் முன் சமர்ப்பிக்கப் படவேண்டுமென்று கூறிய தலைமை நீதிபதி ஸ்ரீபவன் இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் முன்பாகக் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாதென்று தெரிவித்தார்.
தன்னைக் கைது செய்வதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைத்தது.
அப்போது பசில் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொது அரச சொத்துக்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் அவருக்கு பிணை வழங்க மாஜிஸ்ட்ரேட் நீதவானுக்கு அதிகாரங்கள் இல்லை என்று தெரிவித்தார்.
இதன் காரணமாகவே, தாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் கூறினார்.
ஆனால் இந்தக் கருத்துக்களை நிராகரித்த தலைமை நீதிபதி, அரச சொத்துக்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மாஜிஸ்ட்ரேட் நீதவானுக்கு அதிகாரங்கள் இருப்பதாக தெரிவித்ததோடு, கடந்த காலத்தில் பல சந்தேக நபர்களுக்கு மாஜிஸ்ட்ரேட் நீதிபதிகள் பிணை வழங்கியுள்ளதாகக் கூறினார்.
இதனால், தடை உத்தரவைப் பிறப்பிக்க மறுத்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி வரை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
அரச நிதி மோசடி தொடர்பாக காவல்துறையினர் தன்னைக் கைது செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் மனு மூலம் தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஷ அதனை தடைசெய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்