தோட்டப் பாதைகள் செப்பனிடும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்






(க.கிஷாந்தன்) 

தோட்டப்பகுதி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்குத் தடையாகவுள்ள காரணிகளில் தோட்டப்பாதைகள் சீரின்மையும் ஒன்றாகுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்திலுள்ள உள்ளக பாதை ஒன்றை செப்பனிடுவதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்துப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள இந்தப்பாதைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.இரவீந்திரன் , பிரதேச அமைப்பாளர் கேசவன் , மாவட்டத்தலைவர் இளமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்து பேசுகையில்:

தோட்டப்பகுதிகளுக்கான பிரதான பாதைகளும் உள்ளக பாதைகளும் நீண்டகாலமாக செப்பனிடப்படாத காரணத்தினால்
  பெருந்தோட்டப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட தோட்டப்பாதைகள் தற்போதைய கம்பனி நிருவாகத்தினால் கைவிடப்பட்டுள்ளன.

கடந்த கால அரசாங்கங்களில் தோட்டப்பகுதி பாதைகள் செப்பனிடும் பணிகள் மந்த கதியில் இடம் பெற்றன.

இவ்வாறானதொரு நிலையில் மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவும் ஏனைய செயற்றிட்டங்கள் மூலமாகவும் தோட்டப்பகுதி பாதைகள் செப்பனிடுகள் முறையாக இடம் பெறவுள்ளன என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.