அடிப்படை வசதிகளற்ற தலவாக்கலை மேல்பிரிவு




(க.கிஷாந்தன்)

மலையக பெருந்தோட்ட பகுதிகளை உள்ளடக்கிய தோட்டப் பிரிவுகளில் காணப்படுகின்ற அடிப்படை வசதிகளை தோட்ட நிர்வாகங்கள் இனங்கண்டு செய்வதில் அக்கறை காட்டுவது மிக குறைவாக இருக்கின்றது.

இந்த நிலையில் தலவாக்கலை நகரில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் தலவாக்கலை மேல்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் அவர்களின் அடிப்படை வசதிகளில் பின் தங்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றமையை கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் தலவாக்கலை மேல்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் வீடு, குடிநீர், மலசலகூடம், மைதானம், வீதிகள் போன்ற அடிப்படை வசதிகளில் அபிவிருத்தி இன்றி அத் தோட்டத்தை நிர்வகிக்கும் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தால் புறம்தள்ளப்பட்டுள்ளன. அதேவேளை கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நமது சான்றோர்களின் வாக்குக்கு எதிர்மாறாக இத் தோட்ட தொழிலாளர்கள் ஆலயம் ஒன்றை அமைக்கும் வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் இத் தோட்டத்தை நாடி வந்து வாக்கு கேட்டு அன்றைய சூழலில் தம்மால் வழங்க கூடிய வாக்குறுதிகளை வழங்கி விட்டு சென்ற அரசியல் தலைமைகள் இப்பொழுது இத் தோட்டத்தை எட்டி கூட பார்ப்பதில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.

இத் தோட்டத்தில் இருந்து அதிகமான இளைஞர்,யுவதிகள் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் பாடசாலை கல்வியை இடை நிறுத்தி விட்டு வெளிமாவட்டங்களுக்கு தொழில் நிமிர்த்தம் சென்று விட்டனர்.

தற்பொழுது இருக்கும் மாணவமனிகள் பாவனைக்கு உதவாத வீதிகள் ஊடாக சுமார் இரண்டு கிலோமீற்றர் தொடக்கம் நான்கு கிலோமீற்றர் தொலைவில் காணப்படுகின்ற தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்று வருகின்றனர்.

அத்தோடு சிறவர்களுக்கான ஆரம்ப கல்வியை முன்னெடுத்து செல்வதற்கு கட்டிடம் மற்றும் தளபாட வசதிகள் இல்லாமல் தவிக்கும் இத் தோட்ட தொழிலாளர்கள் அங்குள்ள வீடொன்றை குத்தகைக்கு பெற்று ஆரம்ப பாடசாலையை கொண்டு செல்லும் அவலநிலையை காணக் கூடியதாக இருக்கின்றது. பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்க் கொள்ளும் இத் தோட்ட மக்களின் கர்ப்பிணித் தாய்மார்கள், வயதானோர் முதல் சிறுவர்கள் வரை 1500 அடிக்கு அப்பால் காணப்படுகின்ற ஊற்று நீர் குழாய் அமைந்துள்ள பகுதிக்கு சென்று பல அசௌகரியங்களுக்கு மத்தியில் குடிநீர் பெற்று வரும் அவலநிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர்.

கடந்த 15 வருட காலமாக ஆலயம் ஒன்று இல்லாத காரணத்தினால் இம்மக்கள் கலாச்சார ரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியாமல் வருகின்றனர். தேர்தல் காலத்தில் வாக்குகளை கேட்ட அரசியல் தலைமைகள் ஆலயத்தை உடையுங்கள் அதற்கான உதவிகளை செய்வோம் என வாக்கு வழங்கி விட்டு அத் தருணத்தில் எதோ தன்னால் வழங்க கூடிய மணல், செங்கற்கல் கொங்கிறீட் கம்பிகள் என பெற்று தருவதாக கூறி சென்றவர்கள் இதுவரை காலமும் இப்பக்கம் எட்டிகூட பார்க்கவில்லை.

தொழிலாளர்களின் மாதாந்த வேதனத்தில் அவ்வப்போது பிடிக்கப்பட்ட பணத்தை கொண்டு பொருட்களை வாங்கி சேகரித்த வண்ணம் இருக்கின்ற நிலையில் இங்குள்ள சாதாரண ஆலயத்தை பூரணப்படுத்த முடியாமலும் திருவிழா காலங்களில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள முடியாமலும் தவிர்த்து வருகின்றனர்.

இவ்வாறு வாழ்கின்றி இம்மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் அண்ணன், தம்பி என கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்கின்ற நெருக்கடி நிலையை அனுபவித்து வருகின்றனர். சிலர் வாடகை பணம் செலுத்தி வீடுகளை பெற்று வசிக்கின்றனர். இக்காலத்திற்கு ஏற்றவாறு அல்லாமல் பாரிய இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்ற இம்மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டியது இன்றைய அமைச்சு பொறுப்புகளை ஏற்றுள்ளவர்களின் கடமையாகும்.

நகரப்பகுதியிலிருந்து ஒதுக்குபுறமாக இருக்கும் அல்லது பள்ளத்தில் இருக்கும் தோட்டப்பகுதிகளையும் அரசியல் தலைமைகள் கவனிக்கபட வேண்டும். அதேவேளை இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து குறித்த தோட்ட நிர்வாகங்களின் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஓரளவு நன்மைகளை கிடைக்ககூடிய சந்தர்ப்பத்தை ஈட்டி கொடுக்க முடியும்.

ஆகையால் சொல்லெண்ணா துயரத்திற்கு மத்தியில் வாழும் தலவாக்கலை மேல்பிரிவு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தோட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகள் ஆகியவற்றின் கடமையாகும்.