இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
தாமரைத்தடாக கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஜனாதிபதி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியிலும், ஜனாதிபதியாகத் தெரிவான பின்னரும் பகல் உணவினை எனது மனைவி வாழையிலையில் சுற்றி எனது அலுவலகத்திற்கே அனுப்புகின்றார். பிக்கு ஒருவர் இதுபற்றி கருத்து தெரிவித்திருந்ததை என்னால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அரசன், அரசன் போன்று உண்ண வேண்டும். ஜனாதிபதி, ஜனாதிபதி போன்று சாப்பிட வேண்டும். ஜனாதிபதி கிராம உத்தியோகத்தரைப் போன்று உண்ணக்கூடாது. ஜனாதிபதியின் சிறப்புரிமைகள், சலுகைகளை இவருக்கு அனுபவிக்கத் தெரியாது எனக்கூறியிருந்தார். குறிப்பாக அரசன் உணவை உட்கொண்டதைப் போன்றே நீங்களும் உண்ணுங்கள் என்றே அவர் எனக்குக் கூறுகின்றார். அவ்வாறு உண்பதற்கு நான் தயாரில்லை.
அரசாங்க உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி கருத்துக்களைக் கூறினார்,
சில கடிதங்களை கொண்டு சென்றால், ஒரு சில உத்தியோகத்தர்கள் தாம் அவற்றில் கையெழுத்திடுவதால் FCID க்கு செல்ல நேரிடும் என்கின்றனர். சிலர் விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என்கின்றனர். இதன் காரணமாக சில பணிகளில் தாமதம் நிலவுகின்றது என்பதைக் கவலையுடன் தெரிவித்துக்கொள்ள வேண்டியுள்ளது. தங்களின் கடமைகளைப் பொறுப்புடனும் நேர்மையுடனும் செய்கின்ற ஒருவருக்கு அத்தகைய நிலைமை ஒருபோதும் ஏற்படமாட்டாது.