சம்பூர் அனல் மின் நிலையம்- மக்களுக்கு பாதிப்பு





சம்பூர் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படின் அதனால் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம். எனவே இது தொடர்பில் எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் அளவுக்கு நாம் அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் கடற்படை முகாம் இருந்த 177 ஏக்கர் காணியை இரண்டாவது கட்டமாக உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை எதிர்த்தவர்களே தற்போது அங்கு வேலை செய்து சந்தோஷமாக வாழ்கின்றனர். இருப்பினும் அங்கும் பிரச்சினை உள்ளது. 

´சம்பூரைச் சேர்ந்த பலர் தினமும் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அனல் மின் நிலையம் பற்றிய பிரச்சினைகளைக் கலந்துரையாடுகின்றனர். 

நான் நினைத்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனோ அல்லது பிரதமருடனோ அல்லது இந்தியப் பிரதமருடனோ கலந்துரையாடி அனல் மின் நிலையத்தை நிறுத்தியிருக்கலாம். 

அனல் மின் நிலையம் தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் நான் விசாரித்துள்ளேன். இதனால் இரண்டு வகையான பாதிப்புகளே ஏற்படும். 

நிலக்கரியை எரிப்பதால் ஏற்படும் தூசியும் இதனால் பரவக்கூடிய சாம்பல் ஆகியனவே இப்பாதிப்புகளாகும். எனவே இவ்வாறான தீமைகள் ஏற்படவும் எமது மக்களுக்கு அநீதி ஏற்படவும் நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். 

சுற்றப்புறச்சூழல் தொடர்பாக அரசாங்கத்துக்கும் எமக்கும் பல பொறுப்புகள் உள்ளன. இவ்விடயம் தொடர்பாக மீண்டுமொரு முறை சம்பூர் மக்களை நாம் சந்திப்போம். அப்போது மக்களின் கருத்துகள் தொடர்பிலும் நிபுணர்களின் கருத்துகள் தொடர்பிலும் ஆராயப்படும். 

இவ்விடயம் தொடர்பாக அனைவரும் நிதானமாக சிந்திக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்துக்கு பல்வேறு புதிய திட்டங்கள் பல நாடுகளின் மூலம் கிடைத்த வண்ணமுள்ளன. 

அண்மையில் சிங்கப்பூர் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் என்னை இரண்டு தடவைகள் சந்தித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தி தொடர்பாக பாரிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளனர். 

இவ்வாறான திட்டங்கள் இலங்கைக்கு இன்று தேவையானதே எனவும் கூறினார்.