தோட்டத் தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்தில் இழுபறி நிலை




இலங்கைத் தோட்டத் தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்தில் இழுபறி நிலை
இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், தொழிலாளர்களுக்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்தும் இழுபறி காணப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டுவரும் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோருகின்றன.
தோட்டத்தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் காலாவதியான ஒப்பந்தமும் புதுப்பிக்கப்படவில்லை.
தொழிலாளர்களின் சம்பளம் உட்பட அவர்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு இரு தரப்புக்குமிடையில், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்து கொள்ளப்படும் ஓப்பந்தமே கூட்டு ஒப்பந்தமாகும்.

இறுதியாக, 2013ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம், கடந்த வருடம் மார்ச் 31ம் தேதியுடன் காலாவதிவிட்டது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டுவரும் நாளாந்த சம்பளமான 620 ரூபாவை, ஆயிரம் ரூபாய் என அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் உலகச் சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறி, இந்த வேண்டுகோளை தோட்ட நிர்வாகங்கள் நிராகரித்து வருகின்றன.
கடந்த ஒரு வருட காலத்தில், இரு தரப்பினருக்குமிடையில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்தபோதிலும் தீர்வு எட்டப்படவில்லை.

தமது அரசு பதவிக்கு வந்தால் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதாக கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாள் சம்பளத்தை 770 ரூபாவாக அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனம் தயாராக இருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த அதிகரிப்பு பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை கூட்டு ஓப்பந்த தொழிற் சங்கங்கள் கூறுகின்றன.

இதனை முழுமையாக ஏற்கவிட்டாலும், இதனை அடிப்படையாகக்கொண்டு இரு தரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுப்பதன் மூலம் நியாயமான சம்பள அதிகரிப்பை பெற முடியும் என தொழிற்சங்கங்கள் நம்புகின்றன.
இதேவேளை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை அடுத்த சில தினங்களில் தொடர வாய்ப்புகள் இருப்பதாக பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தை மூலம் நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துனைத் தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.