மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையம் நேற்று பொலிஸாரினால் முற்றுகை





-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் சட்ட விரோதமான முறையில் இயங்கிவந்த மதுபான விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை பிற்பகல் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து நூற்றுக்கணக்கான மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்ஹவின் தலைமையில் இயங்கிவரும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஊழல் குற்றவியல் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த மதுபான விற்பனை நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 600க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் குறித்த மதுபானசாலையில் கடமையாற்றய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஊழல் குற்றவியல் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஊழல் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் ஜே. அலோசியஸ் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான சந்திரரத்ன(21780), குலோதுங்க(3177), புவனேஸ்வரம்(42905), திஸாநாயக்க(42375),சமீர(60218),சந்தமால்(69339),பௌசுல் ஹமீன்(66488),பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சிராணி(4492),பொலிஸ் வாகன சாரதி உபாலி(80711)ஆகியோர் இணைந்து இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.

இந்த முற்றுகையின்போது சட்ட விரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த முழு போத்தல்கள் 280,அரை போத்தல்கள் 457, கால்போத்தல்கள் 71 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முற்றுகையின்போது கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் கைதுசெய்யப்பட்ட நபரை வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஊழல் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் ஜே. அலோசியஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மதுபானசாலைகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுவரும் நிலையில் இவ்வாறான சட்ட விரோத மதுபானசாலைகளும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.