ஊடக அமைச்சருக்கு யாழ். முஸ்லிம்கள் சார்பில் மனு




“பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்” எனும் தலைப்பில் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் தென்னிலங்கையில் இருந்து வடக்கு நோக்கி பயணித்த ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் யாழ்.  சென்றடைந்தனர்.
யாழ் சென்றடைந்த தென்னிலங்கை ஊடகக் குழுவை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வரவேற்றதாக அங்கு சென்றிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
அதன் பின்னர் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்த ஊடகவியலாளர் குழு, யாழ். பெரிய முஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்கு ஆசிர்வாதங்களை பெற்றுகொண்டனர்.
இதன்போது யாழ். முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் ஜமால் முஹிதீன் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலகவுக்கு மூன்று அம்சங்கள் அடங்கி மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளார்.
குறித்த மகஜரில், விரட்டப்பட்ட யாழ். முஸ்லிம்கள் தொடர்பிலும், தற்போதைய யாழ். முஸ்லிம்கள் தொடர்பிலும் ஆவணப் படம் ஒன்றை தயாரிக்க வேண்டும் எனவும், யாழ். முஸ்லிம் இளைஞர்களுக்கு ஊடகத்துறை தொடர்பில் செயலமர்வுகளை நடத்துமாறும், ஊடக அமைச்சர் என்ற வகையில் யாழ். முஸ்லிம்கள் தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், ஆவணப்படம் எடுப்பது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், ஊடக செயலமர்வு கொழும்பில் அல்லது யாழ். நகரில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் உறுதியளித்ததாகவும், யாழ். முஸ்லிம்கள் தொடர்பில் அறிக்கை வெளியிடுமாறு கோரப்பட்டது தொடர்பில் எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அங்கு விஜயம் செய்துள்ள எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் ஊடகத்துறை பிரதியமைச்சர், கயந்த பரணவிதாரண, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் ஆகியோர் கலந்துகொண்டனர்