அனல் மின் உற்பத்தியும் அமில மழை அபாயமும்




அனல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயுக்களால் அமில மழை பெய்யும் அபாயம் உள்ளதாக சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பூர் பகுதியில் அனல் மின் உற்பத்தி நிலையமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இலங்கையிலும் அமில மழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது?

மழை நீரின் Ph அளவு மூன்றை விட குறைவடையும்போது அது அமில மழையாகக் கருதப்படுகிறது.

வளி மாசடைவதன் விளைவாகவே அமில மழை பொழிகின்றது.

மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக வளிமண்டலத்தில் சேரும் சல்ஃபர் டையாக்சைட் மற்றும் நைட்ரஜன் டையாக்சைட் என்பன நீருடன் இணைந்து உருவாகும் சல்ஃப்யூரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் காரணமாக மழை நீரின் தன்மை மாற்றமடைகின்றது.

சல்ஃபர் டையாக்சைட் வாயுவின் ஒரு பகுதி தூசியாக நிலத்தில் வீழ்வதுடன் எஞ்சிய பகுதி நீராவியுடன் கலப்பதால் அமில மழை ஏற்படுகிறது.

இதனால் காடுகள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் இருப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜேர்மன், போலந்து, மேற்கு ஐரோப்பா மற்றும் கனடாவிலுள்ள காடுகள் அமில மழை காரணமாக அழிவடைந்து வருவதுடன் மேற்கு ஜெர்மனியில் மாத்திரம் 2 மில்லியன் ஹெக்டயர் காணி அழிவடைந்துள்ளது.

சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின் உற்பத்தி நிலையம் காரணமாக இலங்கையிலும் அமில மழை பெய்வதற்கான அபாயம் உள்ளதா?

இந்தக் கேள்விக்கு சூழலியலாளர் கலாநிதி எரிக் விக்ரமநாயக்க பதிலளித்தார்,

ஆம், இதனால் வடமத்திய மாகாணம் அமைந்துள்ள பிரதேசத்தில் சாம்பல் மற்றும் பார உலோகங்கள் படியலாம். அதன் மூலம் அந்த மாகாணத்தின் விவசாயத்துறைக்கு பாதிப்பு ஏற்படும். அமில மழை பெய்தால் அவ்கன புத்தர் சிலை, ஶ்ரீமாபோதி, நாமல் உயன போன்ற தொன்மைவாய்ந்த சின்னங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
அமில மழையால் மண் வளம் பெரிதும் பாதிக்கப்படும்.

அமில மழை ஆறுகள், குளங்களில் கலந்தால் மீனினம் உள்ளிட்ட அனைத்து நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

பாதகத்தன்மை காரணமாக 2016 ஆம் ஆண்டளவில் சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள அனைத்து அனல் மின் உற்பத்தி நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் அமெரிக்கா ஏற்கனவே 4677 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின் உற்பத்தி நிலையமொன்றையும் மூடியுள்ளது.

2025 ஆம் ஆண்டளவில் தமது நாட்டிலுள்ள அனைத்து அனல் மின் உற்பத்தி நிலையங்களையும் மூடுவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக சம்பூரில் மீள்குடியேறிய மக்கள் தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றனர்.