அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிர இஸ்லாமியவாத நபருக்கு சொந்தமான ஐபோனின் தரவுகளுக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.
இந்த இஸ்லாமியவாத நபரால், அமெரிக்காவின் சான் பெர்னாடினோவில் வைத்து கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த விஷயத்தில், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக எடுக்கவிருந்த சட்ட நடவடிக்கை கைவிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐபோனுக்குள் இருக்கின்ற உள்ளடக்க தகவல்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், மூன்றாம் தரப்பு நபர் ஒருவரின் உதவியுடன் அதனை ஆன்லாக் செய்ய முடிந்துள்ளதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.
முன்னதாக, இந்த ஐபோனுக்குள் நுழைவதற்கான விசேட மென்பொருள் ஒன்றை எழுதுவதற்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு கொண்டுவரப்பட்டிருக்கவே கூடாது என்று ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியது.
உலகிலுள்ள தனது வாடிக்கையாளர்களின் தரவுகள் பாதுகாக்கப்படுவது தேவையானதாக இருப்பதாகவும் அந்நிறுனம் கூறியிருந்தது.