அமெரிக்க ஏழாவது கப்பல் கொழும்பில்




-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மார்ச் மாதம் 26ஆம் திகதி அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யு.எஸ்.எஸ் புளு ரிட்ஜ் (எல்.சி.சி 19) கப்பல்  சனிக்கிழமையன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

2011 ஒக்டோபரிற்கு பின்னர் இலங்கை வரும் முதலாவது அமெரிக்க கடற்படை கப்பலாக இது உள்ளது.

கடற்கொள்ளையை எதிர்கொள்ளல், மனிதநேய உதவி வழங்குதல் மற்றும் பிராந்தியத்தின் பிரதானமான கடற்பாதையில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல் என்பவற்றுக்கான கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கடந்த மாதம் வொசிங்டனில் நடைபெற்ற இருநாட்டு பங்காளித்துவ உரையாடலின் தொடர்ச்சியாக இந்த விஜயம் அமைகின்றது.

'சிறந்த நிலைத்திருத்தல் தன்மை, பாதுகாப்பு, செழுமை மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கினை போஷpப்பதற்கு அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான உறுதியான உறவானது உதவி புரியும்'
என அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் தெரிவித்தார்.

'இலங்கை போன்ற பிராந்திய பங்காளர்களுக்கான அமெரிக்காவின் ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாக ,ந்த அமெரிக்க கடற்படை கப்பலின் விஜயம் அமைந்துள்ளது' என அவர் மேலும் குறிப்பிட்டார். புளு ரிட்ஜ் கப்பலின் 900 மாலுமிகள், இலங்கையின் கடற்படையினருடன் இணைந்து இலங்கையின் துடிப்பான கலாசாரம் மற்றும் அதுசார்ந்த மக்களுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வர்.

அத்துடன், சமுதாய நிலையம் ஒன்றின் சுவர்கள் மற்றும் தளபாடங்களை புதுப்பித்தல், விளையாட்டு மைதான உபகரணங்களை அமைத்தல் மற்றும் தேவையுடையோருக்கு உணவு வழங்கல் போன்ற தன்னார்வ செயற்பாடுகளிலும் மாலுமிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த கப்பலில் அமெரிக்க கடற்படையின் இசைக்குழு உறுப்பினர்களும் வருகை தருவதுடன், கொழும்பில் பொது மக்களுக்காக இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.

மார்ச் 26ஆம் திகதி பிற்பகல் 6 மணி முதல் இரவு 8 மணி வரை விகாரமகாதேவி திறந்தவெளி அரங்கத்தில் இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து வழங்கும் இசை நிகழ்வும் இதில் உள்ளடங்கும்.

அத்துடன், மார்ச் 27ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு கொழும்பு மெஜஸ்டிக் சிட்டியிலும், பிற்பகல் 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் கொழும்பு டச்சு ஹொஸ்பிடல் அருகிலும் பொது மக்களுக்கான இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மார்ச் 29ஆம் திகதி புளு ரிட்ஜ் கப்பலானது ஜப்பானின் யொகோசுகாவில் 36 வருடங்கள் நங்கூரமிட்டிருந்தது.

அமெரிக்காவின் 7வது கப்பல் படையணியின் கட்டளைத் தளபதி, வைஸ் அட்மிரல் ஜோசப் ஆஊகொய்ன் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த புளு ரிட்ஜ் கப்பலானது இந்தோ-ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் பேணுவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11-14ஆம் திகதிகளில் காலித் துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த யு.எஸ்.எஸ் ஃபோர்ட் (எப்.எப்.ஜி 54) கப்பலே கடைசியாக இலங்கை வந்திருந்த அமெரிக்க கடற்படை கப்பலாகும்.