இலங்கையின் வடக்கு -கிழக்குப் பிரதேசங்களில் வீடற்ற குடும்பங்களுக்கென அறுபத்தையாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கு வடமாகாண சபை முழு அளவில் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. வடக்கு - கிழக்கில் வீடற்றவர்களுக்கென அமைக்கப்பட்டுவரும் பொருத்து வீடுகள்.
இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் தளபாட வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்படவுள்ள இந்த பொருத்து வீடுகளின் முதலாவது வீடு யாழ்ப்பாணம் உரும்பிராய் செல்வபுரம் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வீடமைப்புத் திட்டம், வடமாகாண சபைக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாத வகையில் மீள்குடியேற்ற அமைச்சினால் நேரடியாக நடைமுறைப்படுத்துவதை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடமாகாண சபையில் கண்டித்திருக்கின்றார்.
சீன அரசாங்கத்திடமிருந்து கடனாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் நிதியுதவியில் அவர்களின் தொழில்நுட்பத்துக்கு அமைவாக இந்த வீடுகள் அமைக்கப்படுவதும் வடமாகாண சபையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த வீட்டுத் திட்டத்திற்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அறுபத்தையாயிரம் வீடுகளும் கட்டி முடிக்கப்படும் என்பதில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் அரசாங்கமும் உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இந்த வீட்டுத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அரசாங்கம் உறுதியான கல் வீடுகளை ஐந்தரை இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கும்போது 21 லட்சம் ரூபாய் செலவில் பொருத்து வீடுகளை அமைப்பது சரியானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவைப்படுவதாக அதிகாரிகள் மதிப்பிட்டிருக்கின்றனர்.