கடந்த அரசாங்கத்தின் 9 வருட ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிகாரம் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமுல்படுத்தவில்லை எனவும் சில நபர்களின் விருப்பங்கள் மாத்திரமே காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம் செயற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலி நெலுவ பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஆட்சியில் கல்வி சீர்குலைந்து போனது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து கொண்டு செல்ல முயற்சிக்கும் கோஷ்டியினர் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர். குற்றம் அதிகரித்துள்ளதாக கூறும் நபர்களின் காலத்திலேயே குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்பட்டன.
சட்டம் வீழ்ச்சியடைந்து போனது, பொலிஸ் துறை முற்றாக அழிக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. கொலையாளிகளும், கசிப்பு முதலாளிகளும் பாதுகாக்கப்பட்டனர். இப்படி இருந்த நாட்டை ஒரு நாளில் சுத்தப்படுத்தி மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. அதற்கு ஓரிரு வருடங்களாகும் எனவும் சந்திரக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.(