சம்பூர் மக்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீள்குடியேற்றம்




இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு தொகுதி மக்கள் இன்று மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 200 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டதை அடுத்து 546 குடும்பங்களுக்கு அங்கு மீளக்குடியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு பாடசாலைகள் மீண்டும் தறக்கப்படவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இறுதிகட்டப் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஒன்றாக சம்பூர் பிரதேசமும் இருந்தது.
ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அப்போது இராணுவத் தளபதியாக இருந்தவரும் தற்போது அமைச்சராக இருப்பவருமான ஃபீல்டு மார்ஷல் சரத் பொன்சேகா மீது கொழும்பில் விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். எனினும் அதில் அவர் தப்பினார்.
அத்தாக்குதல் இடம்பெற்ற சிலமணி நேரங்களில் பதில் நடவடிக்கையாக சம்பூர் பகுதி மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து இம்மக்கள் அங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
பின்னர் சம்பூர் பிரதேசம் முழுமையாக அரச கட்டுப்பாட்டில் வந்தது. விடுதலைப் புலிகளுடனானப் போர் முடிவடைந்து சுமார் ஏழு ஆண்டுகள் ஆனாலும் சம்பூர் பகுதி மக்களின் மீள்குடியேற்றம் தாமதமடைந்துகொண்டே இருந்தது.
மக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சம்பூர் பகுதி மக்களின் மீள்குடியேற்றம் விரைவடைந்தது.