சிங்கள, தமிழ், முஸ்லிம், பரங்கியர்,மலேயர் எல்லோரும் 2009 மே மாதத்துக்குப் பின்னர் ஒன்றாக இணைந்து செயற்பட முடியாமல் போன காரணத்தினால்தான், 2015 ஜனவரி 8 ஆம் திகதி எனக்கு ஆட்சியை ஒப்படைத்தார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுதந்திர தின விசேட உரையில் குறிப்பிட்டார்.
68 வருடங்களுக்கு முன்னர் பெற்ற சுதந்திரத்தை நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். 1948 முதல் இன்று 2016 வரை நாம் பார்த்தால் பொருளாதார, அரசியல், சமூக, கலாசார ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1948 ஆம் ஆண்டு எமது மக்கள் எதிர்பார்த்த சுதந்திரமும் இன்று மக்கள் எதிர்பார்க்கும் சுதந்திரத்துக்கும் இடையில் பாரிய வித்தியாசமுள்ளது.
1950 களில் பிறந்த குழந்தை ஒரு கலாசாரக் குழந்தையாகவே நான் காண்கின்றேன். ஆனால், இன்று பிறக்கும் குழந்தைகளை தொழில்நுட்பக் குழந்தையாகவே நாம் காண்கின்றோம். அன்று பிறந்த குழந்தைகளையும் இன்று பிறக்கும் குழந்தைகளையும் ஒன்று சேர்த்து ஒன்றுபட்டு நாம் முன்னோக்கிச் செல்லவேண்டும்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் வீரர்கள் தேசிய சுதந்திரத்துக்காக ஒன்றுபட்டு உழைத்துள்ளார்கள். அது எமக்குத் தெரியும். வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து நாம் வெளியெறினோம். 400 ஆண்டுகளாக வெளிநாட்டு ஆட்சியாளர்களின் கரத்திலேயே இந்த நாடு பெற்றிருந்த பலவற்றை இழந்திருந்தோம். எமது கலாசாரத்தை, பொருளாதாரத்தை எமது பாரம்பரியங்களை நாம் இழந்தோம். பண்டைய மன்னர்கள் நிருமாணித்த பலவற்றை நாம் இழந்தோம். 1505 ஆம்ஆண்டு முதல் போராடிய எமது வீரர்கள் உயிர்த்தியாகத்துடன் போராடி 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தைப் பெற்றோம்.
காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றாலும், அவர்களினால் உருவாக்கப்பட்ட பல பிரச்சினைகளை விட்டுச் சென்றார்கள். இன, மத குல பேதமின்றி நாம் அன்று போராடினோம்.சுதந்திரம் பெற்று 68 வருடங்கள் கடந்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டோமா என்று நாம் மனச்சாட்சியைத் தொட்டுக் கேட்க வேண்டும்.
ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம் இவை சரியாக இருந்திருந்தால், பிரச்சினை இல்லாமல் போயிருக்கும். பயங்கரவாதம் உருவாகியிருக்காது. மொழி, மத, கலாசாரப் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் சரியாகப் புரிந்து செயற்பட்டிருக்க வேண்டும். உலக நாடுகளுடன் எதிர்நோக்குகின்றன பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சியோடு நாம் எமது மக்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இன்று தொழில்நுட்பக் காலத்தில் பிறந்த பிள்ளைகள் புதிய சிந்தனையோடு செயற்படுகின்றார்கள். புரட்சிகர சிந்தனைகளை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். நாம் அதனைப் புரிந்து ஒன்றிணைந்து அரச நிருவாகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
சுதந்திரம் என்ற சொல்லின் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு செயற்படுவது மிக மிக முக்கியமானது. சுதந்திரம் என்ற சொல்லுக்கு பல்வேறு கருத்துக்களை முன்வைக்க சிலர் முயற்சி எடுக்கின்றார்கள். ஜனநாயகத்தைப் பலப்படுத்தியுள்ள கால கட்டத்தில் உள்ளோம். இன்று மன்னர்கள் ஆட்சி செய்த காலம் இல்லை. சுதந்திரம் சரியாக செயற்படுத்தப்பட்டு ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். அது சரியாக செயற்படாத காரணத்தினாலேயே தான் 26 வருடங்களாக எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்துக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முப்படை வீரர்களுக்கும் பொலிஸாருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.
எமது மக்களை நாம் சரியான வழியில் இட்டுச்செல்ல வேண்டும். அரசியல்,சமூக, கலாசார, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நாம் முக்கியத்துவம் வழங்கியுள்ளோம். யுத்தத்துக்கு பின்னரான 2009 இற்குப் பின்னரான காலப் பகுதியை ஒழுங்காகப் பயன்படுத்தாததின் காரணத்தினால்தான், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மூலமாக செப்படம்பர் மாதத்தில் புதிய பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்த பிரச்சினையாக இருந்தவற்றை நாம் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தீர்க்க வேண்டியதாக இருந்தது. 2015 இற்குப் பின்னர் எல்லாப் பிரச்சினைகளையும் நாங்கள் தீர்க்க வேண்டியிருந்தது. எமக்குப் பின்னர் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் இன்று அரசியல், சமூக, கலாசார ரீதியில் சீர்திருத்தம் பெற்று முன்னேறியிருக்கின்றன.
சர்வதேச மனித உரிமைகள் மூலமாக வழங்கப்பட்ட யோசனைகளை நாம் செயற்படுத்தும் போது எமது அரசின், மக்களின், முப்படை வீரர்களின் கௌரவத்தை எந்த விதத்திலும் பாதிக்காத வகையிலேயே தான் நாம் செயற்படவுள்ளோம். இது தொடர்பாக சில அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடாத்த முயற்சிக்கின்றனர். பாதுகாப்புப் படையினருடைய அந்த நிலையை நாம் அவ்வாறே பாதுகாப்போம். 68 வருடங்கள் முடிந்துள்ளன.
உங்களைப் பாதுகாப்பேன். நாட்டைப் பாதுகாப்பேன். நாட்டில் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன். நாட்டை முன்னேறச் செய்வேன். மக்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவேன். அபிமானமுள்ள மக்களாக, அபிமானமுள்ள நாடாக உலக நாடுகள் மத்தியிலேயே சிறந்த பெயரைப் பெறவேண்டிய நாடாக நாம் செயற்பட வேண்டும்.
கடந்த ஒரு வருடத்தில் ஜனநாயகத்தை நாம் முழுமையாக பாதுகாப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டோம். அதுமாத்திரமல்லாது, சுதந்திர ஆணைக்குழுக்கள் பலவற்றை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
19 ஆம் அரசியல் யாப்புத் திருத்தத்தினால் இதனை நாம் கொண்டுவந்தோம். பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்தியுள்ளோம். லஞ்ச, ஊழல் இல்லாமல் செய்ய நாம் செயற்பட்டு வருகின்றோம். ஊடகத்துறைக்கும் என்றுமில்லாத சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். அதனை அவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். அவர்கள் அதனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
போசாக்கு நிறைந்த சந்ததியை நாம் இந்த நாட்டில் உருவாக்க வேண்டும். உணவுற்பத்தி, கைத்தொழில் துறையில் நாம் நிச்சயம் முன்னேற்றம் காண்போம். எமது நாட்டைச் சுற்றியுள்ள கடல் வளத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். எமது நாட்டிலுள்ள மக்களை, எமது தேசத்து வீரர்களை நாம் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயறப்படாமல், ஒன்றுபட்டு சகோதரர்களாக, நல்லிணக்கத்தோடு நாம் செயற்படுவோம். சுதந்திரம், ஜனநாயகத்தினூடாக மக்களுக்கு இருக்கக் கூடிய வாய்ப்பை சரியாகப் நாம் பயன்படுத்துவோம். எமது எல்லா மக்களுக்கும் 2020 2030 இவ்வாறாக எதிர்வரும் இரு தசாப்தங்களுக்கு நாங்கள் உலகில் சிறந்த நாடாக மிளிர்வதற்கு செயற்பட்டு வருகின்றோம். நாம் இந்த அழகிய நாட்டை ஒன்றாக கட்டிக்காப்போம் எனவும் ஜனாதிபதி மேலும் தனது நீண்ட உரையில் கூறினார்.