அவுஸ்திரேலியாவை தோற்கடித்த நியூசிலாந்து




அவுஸ்திரேலியாவை தோற்கடித்த நியூசிலாந்து: வெற்றியுடன் விடைபெற்ற மெக்கல்லம்
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்றுடன் முடிவடைந்தது.

ஏற்கனவே முடிவடைந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் இருந்தது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்று விடலாம் என்பதால் இரு அணிகளும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில், பிரண்டன் மெக்கல்லம் ஜோடி நல்ல துவக்கம் தந்தது.

முதல் விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் சேர்த்தபோது, 27 பந்தில் 47 ஓட்டங்கள் அடித்த மெக்கல் ஆட்டமிழந்தார்.

அபாரமாக ஆடிய கப்டில் அரைசதம் கடந்தார், ஹென்றி நிக்கோல்ஸ்(18), கோரி ஆண்டர்சன் (27) ஓட்டங்களுடன் வெளியேறினர்.

எலியாட் 50 ஓட்டங்கள் எடுத்தார், நியூசிலாந்து அணி 45.3 ஓவரில் 246 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர், இதனைத் தொடர்ந்து 247 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சார்பில் உஸ்மான் கவாஜா 44 ஓட்டங்கள் எடுத்தார், ஸ்டீவ் ஸ்மித்(21), ஜார்ஜ் பெய்லி(33) ஓட்டங்கள் எடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணி 43.4 ஓவரில் 191 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது, இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 எனக் கைப்பற்றியது.

குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இருந்தது. ஏனென்றால், மெக்கல்லம் இந்த போட்டியுடன் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.

அதன்படி, வெற்றியுடன் மெக்கல்லம் விடைபெற்றார்.