ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக்கி, புதிய கட்சியொன்றை உருவாக்க எடுக்கும் தீர்மானம், நாட்டை அராஜகத்துக்கு இட்டுச் செல்லும் ஒரு முயற்சியே எனவும், அதற்கு தமது கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என ஸ்ரீ லங்கா கம்யுனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகம் டியு குணசேகர தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி உருவாக்குவதன் நன்மை மக்களுக்கல்ல எனவும், அதனை உருவாக்க நினைக்கும் தலைவர்களுக்கே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது புதிய கட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்து வரும் உதய கம்மம்பிலவும், விமல் வீரவங்சவும், அடிப்படைவாத இனவாதிகளாக காணப்படுவதனால், அந்தக் கட்சியில் ஒருபோதும் இடதுசாரி கருத்துக்கோ, முற்போக்கு கருத்துக்கோ இடமிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை அரசாங்கம் கொண்டு வந்த நடவடிக்கைகளில் விமர்சனங்கள் காணப்பட்டிருப்பினும், எதிர்க் கட்சியினர் குறித்த விடயங்களை விமர்சனம் செய்வதற்குப் பகரமாக இனவாத குதர்க்கத்தை மாத்திரம் புரிந்து வருவதாகவும் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் செயலாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள சமசமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண கூட்டு எதிர்க் கட்சிக்கு எதிரான கருத்தை தெரிவித்திருந்தார் என்பதும், இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தமிழில் தேசிய கீதம் பாடியது சரியானது என கருத்துத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.