பொதுபல சேனா செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கூறி, 25 லட்சம் கையொப்பம் சேகரிக்க பெல்மடுல்ல நகரில் இன்று முன்னெடுத்த நடவடிக்கைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பெல்மடுள்ள பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மஞ்சுல டயஸ் தலைமையிலான குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களிடம் அங்கிருந்த பொதுபல சேனா பிக்குகள் கையொப்பம் பெற முற்பட்ட போதே பிரதேச சபை உறுப்பினர் தலையிட்டு மாணவர்களிடம் கையொப்பம் பெற வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதன்போது, அங்கிருந்த தேரர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
யுத்தத்தை வென்ற இராணுவத் தளபதியை கடந்த அரசாங்கம் சிறையில் அடைத்தபோது, இந்த பொதுபல சேனா எங்கிருந்தது என அங்கு கூடிய பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். நாமும் இந்நாட்டின் பௌத்த மக்கள். தேரர் தவறு செய்யாதிருந்தால் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்க மாட்டாது எனவும் அங்கு கூடிய மக்கள் பொதுபல சேனா பிக்குகளுக்கு எதிராக கருத்துத தெரிவித்தனர்