யாழில் மனித உரிமை ஆணையர்




"நல்லிணக்கம், மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கை முன்னேறியுள்ளது"
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் முன்னேற்றம் கண்டுள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் கூறினார் என வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார்.
நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள ஐ நா மனித உரிமைகள் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹுசைன், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அவரது அமைச்சரவையினருடன் சனிக்கிழமை பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ஐ நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படுகின்றன என அல் ஹுசைன் தெரிவித்தார் என ஹர்ஷா டி சில்வா கூறுகிறார்.
தனது பயணத்தின்போது அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசவுள்ளதாக கொழும்பு சென்றடைந்தவுடன் அல் ஹுசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.
பின்னர் திங்கட்கிழமை அவர் திருகோணமலை மற்றும் கண்டிக்கு செல்வார் என எதிர்பார்க்கபப்டுகிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள், அரச தரப்பினர், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள் உட்பட பல்தரப்பினரையும் ஐ நா மனித உரிமைகள் ஆணையர் சந்திக்கிறார்.
இச்சந்திப்புகளுக்கு பிறகு எதிர்வரும் ஒன்பதாம் தேதி செவ்வாய்கிழமை கொழும்பில் செய்தியாளர்களை சந்திக்கும் அவர் தனது பயணம் குறித்த கருத்துக்களை வெளியிடவுள்ளார் என அவரது அலுவலக அறிக்கை கூறுகிறது.