உழவு இயந்திரம் குடை சாய்ந்து வாய்க்காலில் விழுந்து விபத்து சாரதிக்கு காயம்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மணற்பிட்டி – மட்டக்களப்பு பிரதான வீதியின் தேவிலாமுனை பகுதியில் திங்கட்கிழமை உழவு இயந்திரம் ஒன்று தானாகவே வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதனை ஓட்டிச் சென்ற சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வயலில் இருந்து நெல் ஏற்றுவதற்காக சென்ற இந்த உழவு இயந்திரம் வீதியின் அருகில் உள்ள கொங்கிறீற் கட்டில் மோதி விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்துள்ளது.
சம்பவத்தில் மயிரிழையில் உயிர் தப்பி காயங்களுக்குள்ளான சாரதி கொக்கட்டிச்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.