எச்சில் மூலம் ஸிக்கா வைரஸ்




எச்சில் மூலம் ஸிக்கா வைரஸ் பரவும் அபாயம்.
டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான நுளம்புகளின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் வேகமாக பரவி வருகின்றது.

தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிக்கா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன.

இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ நுளம்புகளால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாலியல்தொடர்புகள் மூலமாகவும் ஸிக்கா பரவுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பிரேசில் நாட்டில் 1000 இற்கும் அதிகமான குழந்தைகள் ஸிக்கா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியா கண்டத்துக்கும் வேகமாக பரவ தொடங்கியுள்ள ஸிக்கா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமான “WHO” கவலை தெரிவித்துள்ளது.

ஸிக்கா வைரஸ் கிருமிகள் மிக வீரியத்துடன் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான மார்கரெட் சான் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 40 இலட்சம் மக்களை இந்நோய் தாக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்த்துறை இயக்குனரான டாக்டர் மார்கோஸ் எஸ்பினல், நுளம்புகள் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கெல்லாம் ஸிக்கா நோய் செல்லக்கூடும். அது பரவும்வரை நாம் காத்திருக்க கூடாது என எச்சரித்துள்ளார்.

அமெரிக்க நாடுகளை கடந்து ஐரோப்பிய நாடுகளிலும் ஸிக்கா நோய் வேகமாக பரவி வருகின்றது. அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்ஸாஸ் மாநிலத்திலும் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஸிக்காவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியுடன் உடலுறவு வைத்துகொண்டதன் மூலம் தற்போது இங்குள்ள ஒரு ஆணுக்கும் ஸிக்கா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அமெரிக்க நாடுகளான ஹோன்டுராஸ் மற்றும் நிகாரகுவா நாடுகளில் தலா ஒரு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸிக்கா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து ஹோன்டுராஸ் நாட்டில் 3,200 பேருக்கும், நிகாரகுவாவில் 29 பேருக்கும் இந்நோய் தொற்று பரவியுள்ளது, தெரியவந்துள்ளது.

நியூயோர்க் நகரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸிக்கா தாக்கம் உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகளை இலவசமாக நடத்த வேண்டும் என அம்மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் வெப்ப பிரதேசமாக கருதப்படும் புளோரிடா மாநிலத்தில் ஸிக்கா வைரஸ் வேகமாக பரவிவருகிறது.

அங்குள்ள தட்பவெப்ப நிலை ஸிக்கா வைரஸை பரப்பும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாக சாதகமாக அமைந்துள்ளதால், புளோரிடா மாநிலம் முழுவதும் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் ரிக் ஸ்காட் அறிவித்துள்ளார்.

குறிப்பாக, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட், மியாமி-டாடே, டம்பா பிராந்தியத்தில் உள்ள ஹில்ஸ்பரோ, தென்மேற்கில் உள்ள லீ கவுன்ட்டி மற்றும் சான்ட்டாரோஸா கவுன்ட்டியில் கொசுக்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை பணியாளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புயலைப்போல இந்த நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸிக்கா வைரஸ் பரவுவதையடுத்து சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்திய ஐந்தாவது மாநிலம் புளோரிடா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸிக்கா நோய்த்தொற்று உள்ளவர்களின் எச்சில் மற்றும் சிறுநீரகம் மூலமாக இந்நோய் மற்றவர்களுக்கு வேகமாக பரவக்கூடும் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வெளிநபர்களை முத்தமிடுவதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என பிரேசில் அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதேபோல், அமெரிக்காவில் ஸிக்கா பாதித்த நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் பயணிகளுக்கான புதிய மருத்துவ எச்சரிக்கையை அமெரிக்க சுகாதாரத்துறையும் வெளியிட்டுள்ளது.