அலிகார் கல்லூரியை அபிவிருத்தி செய்ய நிலவளம் இல்லை





அலிகார் தேசியக் கல்லூரியை அபிவிருத்தி செய்ய நிலவளம் இல்லாதிருப்பது பெரும் சவாலாகவுள்ளது.
கல்லூரி அதிபர் எஸ்.ஏ. நஜீப்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சுமார் 100 வருடங்களைக் கடந்து புகழ்பரப்பி நிற்கும் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியை சமகாலத் தேவைகளுக்கேற்ப ஈடுகொடுத்து நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்கு அதன் காணிப்பற்றாக்குறை என்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக கல்லூரி அதிபர் எஸ்.ஏ. நஜீப் தெரிவித்தார்.
அலிகார் தேசியக் கல்லூரியிலிருந்து பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான 88 மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை 07.02.2016 அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கல்லூரி அதிபர் மேலும் கூறியதாவது,
1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின்போது இந்தக் கல்லூரியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் மின்சார வசதி, இடவசதி, நீர் வசதி, மலசல கூட வசதி, தளவாட வசதி என்று எதுவுமில்லாத சூழ் நிலையில் இந்தக் கல்லூரி எவ்வாறாயினும் இயங்கி வந்துள்ளது.
ஆயினும், தற்போதைய நவீன தொடர்பாடல் மற்றுமுள்ள தொழினுட்ப வசதிகளுக்கும் மாணவர் அதிகரிப்புக்கும் ஏற்ப ஈடுகொடுக்கக் கூடியதாக இக்கல்லூரியை மாற்றுவதில் இடப் பிரச்சினை எமக்கு ஒரு சவாலாக உள்ளது.
அரசாங்கத்தின் சமீபத்திய 600 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்திலாவது எமது பாடசாலை உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் அயராது பாடுபட்டோம்.
ஆயினும் எமது பாடசாலை அந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டதான எந்த சமிக்ஞையும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. இது கவலையளிப்பதாய் உள்ளது.
குறைந்தபட்சம் சிறந்த மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குக் கூட நிலப்பற்றாக்குறை என்பது இங்கு பெரும் தடையாக உள்ளது.
அதனால், இந்த விடயத்தில்  கல்வி அதிகாரிகள் மற்றுமுள்ள அரசியல் உயர் மட்டங்கள் சிரத்தை எடுக்க வேண்டும் என்று இங்கு கல்வி கற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களும், பெற்றோரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்' என்றார்.
இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர், பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்