பொருளாதாரத்தில் முன்னேற அரசு பல திட்டங்களினூடாக உதவுகின்றது





அறிவையும் திறனையும் பெற்று பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு இப்பொழுது அரசு பல திட்டங்களினூடாக உதவுகின்றது.
பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர்
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) 

அறிவையும் திறனையும் பெற்று பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு இப்பொழுது அரசு பல திட்டங்களினூடாக உதவுகின்றது என ஏறாவூர்ப் பற்று செங்கலடிப் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களமும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வருடாந்த தையல் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக கண்காட்சிக் கூடத்தில் புதன்கிழமை (03.02.2016) இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உடுதுணிகள், மரவேலைப்பாடுள், அணிகலன்கள், உணவுப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், உட்பட பல்வேறு கலையம்சங்களுடன் கூடிய வேலைப்பாடுகள் அமைந்த பல்வேறு பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் மேலும் கூறியதாவது, கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக பிரதேச செயலகங்கள் தோறுமுள்ள மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் பல்வேறுபட்ட தொழிற்துறை சார்ந்த பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு  பயிலுநர் ஒவ்வொருவருக்கும் மாதமொன்றுக்கு தலா 2000 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது.

அத்துடன் டிப்ளோமா தரத்தில் தையல், சமையல், அலங்காரம், கம்பளி வேலைப்பாடுகள், கைப்பணிகள் போன்ற துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் ஏதாவதொன்றில் யுவதிகள் புலமை காட்டி அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடிவதோடு எதிர்காலத்தில் சிறந்த தொழில் வழங்குநர்களாகவும் மாறமுடியும்.

எந்தக் கைத்தொழிலாக இருந்தாலும் அது நிபுணத்துவம் நிறைந்pததாக இருந்தால் அந்த உற்பத்திப்  பொருட்களுக்கான கிராக்கி அதிகரிக்கும். அந்த நுட்பங்களை நீங்கள் கையாண்டு சிறந்த பொருளாதார வளத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.' என்றார்.

இந்த கண்காட்சியை பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மோகன் பிறேம்குமார், உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சினி முகுந்தன், பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் டிலானி ஆதித்தன் உட்பட பிரதேச செயலக அதிகாரிகளும், மகளிர் அபிவிருத்தி நிலையப் போதனாசிரியை ஆர். நிவேதிகா, மற்றும் பயிலுநர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.